Sunday, 25 April 2010

கிரிக்கட்= மதம்= அபின்



கிரிக்கட் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு விளையாட்டில்லை ஒரு மதம் என சொல்வோர் மனதில் என்ன எண்ணிச் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் மிகச்சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன்பாக கார்ல் மார்க்ஸ் சொன்ன மதம் என்பது அபின் என்ற வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும்.

எப்படி ஒரு கூட்டம் மக்களை இவ்வளவு நாட்கள் முட்டாளாக வைத்திருக்க மதம் பயன்பட்டதோ எப்படி அது காலம் காலமாக மனிதனின் சிந்தனை சக்தியை மட்டுப்படுத்தி வைத்திருந்ததோ எப்படி மனிதன் எதைப்பற்றியேனும் கேள்வி கேட்க விடாமல் சொர்க்கம் நரகம் மறுபிறவி என்ற சொற்களால் முட்டாளாக வைத்திருக்க உதவியதோ அந்த நிலையினை மீறி இன்று சில மக்கள் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் ஆரம்பித்து விட்ட நிலையில் அடுத்து அவர்கள் கையில் சிக்கிய நவீன வீரியம் மிக்க போதைப்பொருள் கிரிக்கட்.

எப்படியெனினும் இவ்விளையாட்டு முதலில் ஒரு சாதாரண விளையாட்டாகவே ஆங்கிலேயரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மற்ற விளையாட்டுகளுக்கும் இதற்கும் உள்ள ஒரு வேறுபாடு இவ்விளையாட்டை இந்தியத் திருநாட்டில் மதமென உருவெடுக்க வைத்தது.

அது என்னவென்றால் இந்த ஒரு விளையாட்டில் மட்டும் அதிர்ஸ்ட்டம் அதுதானுங்க லக்கு கைகொடுத்தால் கொஞ்சம் திறமையிலேயே வெற்றி நம் பக்கம் வந்துவிடும்.
இப்படியாக வெற்றி பெற இயலும் என்றே எண்ணியிராத நிலையில் மேற்கிந்திய அணியை வென்று (மொத்த்த்தில் பத்துக்கும் குறைவான நாடுகளே விளையாடும்) உலகக்கோப்பையை வென்றுவர அந்த விளையாட்டு மற்ற சோதா அணிகளைக் கொண்டிருந்த இந்திய விளையாட்டுக்களை நசுக்கி ரிலையன்ஸ் நிறுவனத்தினை போல உச்ச வேகத்தில் வளர்ந்தது.

அனைத்து விளையாட்டுகளிலும் இந்தியா பின்தங்கியிருக்கும் காலத்தில் ஒரு விளையாட்டில் மட்டும் சில சமயங்களில் வெற்றி பெற அது மக்களின் கவனம் பெற்றது. அந்த விளையாட்டில் பணம் புரளவும் அதில் பங்குகொண்ட வீரர்கள் புகழ்பெறவுமாக மெள்ள ஆரம்பித்தது.

அதன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் அது மற்ற விளையாட்டுக்களைப் போல ஒன்றறை மணி நேரத்தில் முடியாது. இது செயற்கைக்கோள் தொலைக்காட்சி வழி நேரடி ஒளிபரப்பு ஆரம்பமானதும் வேளையில்லாது இருந்த இந்திய மக்களை நாள் முழுதும் நாற்காலியின் முனையில் கட்டிப்போட்டுவைத்தது.

ஏதாவது ஒன்று மகிழ்வாய் நிகழாதா என்று தவித்துக்கிடந்த மக்களுக்கு இவ்விளையாட்டின் வெற்றிகள் போதையூட்டின.

மேலும் அது தன்னை பல்லாண்டு காலம் அடிமையாக ஆண்டு வந்த இங்கிலாந்தையும் சுதந்திரம் பெற்றபோதிருந்து எதிரியாக உருவாக்கப்பட்ட பாகிஸ்தானையும் அடிக்கடி மோதி சில வெற்றிகளைப் பெறவும் நாட்டின் கவனம் குதூகலத்துடன் முழுமையாக இவ்விளையாட்டின் மீதான போதை அதிகமானது.

இவை யாவும் வரமாய் அமைந்தது எப்படியடா இந்த மக்களை சமாளிப்பது என்றறியாது தவித்துக்கொண்டிருந்த தலைவர்களுக்கு. எது நடந்தாலும் அதனை அடுத்த கிரிக்கட் விளையாட்டுப் போட்டி வரும் வரையில் சமாளித்தால் போதும் என்றாயிற்று இவர்களுக்கு.
எது எப்படியோ போகட்டும் ஆனால் தலைவர்களுக்கு அவசியமான மக்களை ஒரு போதையில் வைத்திருப்பது இந்த இவ்விளையாட்டின் வழி அவர்களுக்கு சாத்தியமானது.உடன் உறுதியானது இம்மக்களை மயக்கத்தில் வைத்திருக்க இதைவிட சிறந்த போதையும் இல்லையென.

இவ்விளையாட்டிற்குப் பின்னால் அவிழ்த்துவிடப்பட்டது அரசு இயந்திரம்.அரசின் கட்டுப்பாட்டில் துளியும் இல்லாத இவ்விளையாட்டின் அனைத்துப் போட்டிகளும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப் பட்டன. முக்கிய போட்டிகளில் பார்வையாளர்கள் வரிசையில் அனைத்து தலைவர்களும் வந்து இவ்விளையாட்டிற்கான தங்களது உறுதியான ஆதரவை வெளிப்படுத்தி மக்களின் மனதில் தமது பிம்பங்களை நிலைநிறுத்திட முயன்றனர்.

மற்றுமொரு சாதகமான அம்சமாக அம்மதத்தின் தெய்வங்கள் இலங்கையின் ரனதுங்கா போலவோ பாகிஸ்தானின் இம்ரான் கான் போலவோ இங்கு தேர்தலில் போட்டியிட்டு வயிற்றில் புளியையும் கரைக்கவில்லை. தெய்வ அடையாளத்தோடு தேர்தலில் போட்டியிட்ட ஒருசில குறுந்தெய்வங்களும் மண்ணைக்கவ்விட இவ்விளையாட்டின் தெய்வங்களேயாயினும் ஒருபோதும் தங்கள் கருணையின்றி கோட்டைக்குள் நுழைய முடியாது என்பதையும் உறுதி தலைவர்களும் செய்துகொண்டாயிற்று.

இம்மதத்தில் தேவையான சில சீர்திருத்தங்களும் செய்யப்பட்டன.

ஐந்து நாள் போட்டிகள் குறைக்கப்பட்டு ஒருநாள் போட்டிகள் அதிகப்படுத்தப்பட்டன.

ஒருநாள் போட்டிகளில் இரவு பகல் ஆட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒருநாள் போட்டிகளின் இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டு ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டன.

ஆறுகளுக்காகவும் நான்குகளுக்காகவும் மைதானங்கள் குறுக்கப்பட்டன.

கிரிக்கட் மதத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடாது இருக்க அறிமுகப்படுத்தப்பட்ட நவீன சுவாரஸ்யமான வழிபாட்டு வடிவம் இருபதுக்கு இருபது போட்டிகள்.

ஐ பி எல் எனபது கிரிக்கட் எனும் மதத்தின் சுவாரஸ்யமான இந்திய வழிபாட்டு வடிவமாகும்.

எப்படியும் ஆண்டில் இரண்டு மாதங்கள் ஐ பி எல் வழிபாடு. பின்னர் வருகிறது உலகக்கோப்பை இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும் இன்னபிற போட்டிகள்.
கிரிக்கட் தெய்வங்கள் மக்களின் மனமகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு இடையறாது உழைக்கின்றார்கள். பூசாரிகளும் அவர்களுக்கு தேவையான வழிபாட்டு முறைகளை நேர்த்தியாக அனுசரிக்கிறார்கள்.

ஆக மொத்தத்தில் மக்களின் மனத்தில் இப்போது பிடித்துள்ள இப்போதை தெளியாதிருத்தல் ஒன்றே தலைவர்களின் தேவை.அதனை உறுதிப்படுத்த புதிய மதமென்னும் பெயருடன் இப்போதைப்பொருள் விற்பன்னர்களுக்கு அரசின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு அனைத்து வரிவிலக்குகளுடன் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வழி ஒவ்வொரு வீட்டிலும் விற்கப்படுகிறது. இந்தப் போதைக்கு உடனடியாக மட்டுமல்ல எதிர்காலத்திலும் ஒன்றும் ஆபத்தில்லை. தலைவர்களின் தேவைப்படி மக்களுக்கும் இப்போதையின் விபரீதம் இப்போதைக்குத் தெரியப்போவதில்லை.